Friday, August 25, 2017

கவிஞர் மஹாகவி

துரைசாமி உருத்திரமூர்த்தி(அளவெட்டி, யாழ்ப்பாணம்) (சனவரி 9, 1927 - சூன் 20, 1971) ஈழத்தின் கவிதைமரபில் முக்கியமான கவிஞர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். இவர் மஹாகவி என்ற புனைபெயரில் எழுதியவர். இவரது ஏனைய புனைபெயர்கள் - பண்டிதர், மாபாடி, காப்பியாற்றூப் காப்பியனார், மகாலட்சுமி, பாணன், வாணன் என்பனவாகும். நீலாவணன்முருகையன் ஆகிய பிரபல ஈழத்து கவிஞர்களோடு சமகாலத்தில் எழுதிவந்தவர்.
Image result for uruthiramoorthy


‘சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும்
சிலவேளை இதைவந்து கடல் கொண்டு போகும்
கறிசோறு பொதியோடு தருகின்ற போதும்
கடல் மீதில் இவள் கொண்ட பயம் ஒன்று காணும்
வெறுவான வெளிமீது மழைவந்து சீறும்
வெறிகொண்ட புயல்நின்று கரகங்கள் ஆடும்
நெறிமாறு பட நூறு சுழிவந்து சூழும்
நிலையான தரைநீரில் இலைபோல் ஈடாடும்
இருளோடு வெளியேறி வலைவீசினாலும்
இயலாது தரவென்று கடல் கூறல் ஆகும்
ஒரு வேளை முகில் கீறி ஒளி வந்து வீழும்
ஒரு வேளை துயர் நீள உயிர் வெந்து சாகும்’
-மஹாகவி உருத்திரமூர்த்தி

புள்ளி அளவில் ஒரு பூச்சி 

புத்தகமும் நானும்,
புலவன் எவனோதான்
செத்த பின்னும் ஏதேதோ சேதிகள் சொல்ல
மனம்
ஒத்திருந்த வேளை!

ஓழுங்காக அச்சடித்த
வெள்ளைத் தாள் மீதில்,
வரியின் முடிவினிலே,
பிள்ளைத் தனமாய் பிசகாகப் போட்ட காற்
புள்ளியைக் கண்டு
புறங்கையால் தட்டினேன்.

நீ இறந்து விட்டாய்!
நெருக்கென்ற தென்நெஞ்சு

வாய் திறந்தாய், காணேன்,
வலியால் உலைவுற்றுத்
“தாயே’ என அழுத
சத்தமும் கேட்கவில்லை.

கூறிட்ட துண்டுக் கணத்துள் கொலையுண்டு
ஓர்
கீறாகத் தேய்ந்து கிடந்தாய்,
அக்கீறுமே
ஓரங்குலம் கூட ஓடியிருக்கவில்லை.

காட் டெருமை காலடியிற்
பட்ட தளிர்போல,
நீட்டு ரயிலில்
எறும்பு நெரிந்ததுபோல்,
பூட்டாநம் வீட்டிற் பொருள்போல
நீ மறைந்தாய்.

மீதியின்றி நின்னுடைய
மெய் பொய்யே ஆயிற்று
நீதியன்று நின்சா,
நினையாமல் நேர்ந்ததிது,
தீதை மறந்து விட மாட்டாயோ சிற்றுயிரே!

காதில் அப்பூச்சி கதை ஒன்றே வந்துவந்து
மோதிற்று;
மீண்டும் படிக்க முடியவில்லை
பாதியிலே பக்கத்தை மூடிப்
படுத்துவிட்டேன்.
-மஹாகவி உருத்திரமூர்த்தி