முன்னொரு காலத்தில் அத்திரி மகரிஷி என்ற மகா தபஸ்வி வாழ்ந்து வந்தார். அவரது மனைவி அநுசூயா. அவள் பதிவிரதா சிரோன்மணி. அவளுடைய பதிபக்தியை மூவுலகங்களும் புகழ்ந்தன. அவளது அடக்கமும் பொறுமையும் செயல்படும் திறனும், கணவனின் குறிப்பறிந்து சேவை செய்யும் பாங்கும் எங்கும் எல்லோராலும் பாராட்டிப் பேசப்பட்டன. தேவர்களும் அவளது பெருமையை மதித்துப் போற்றினர். அநுசூயாவைப் போல் ஒரு மாதர் குலத் திலகம் எங்கு தேடினாலும் பார்க்க முடியாது என்று நாரதர், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய மூன்று தேவியரிடம் புகழ்ந்து பேசினார்.
தம்மையும் விட மேலானவள் அநுசூயை என்ற புகழ்ச் சொற்கள் தேவியர் மூவரிடமும் பொறாமையை ஏற்படுத்தியது. எனவே அவர்கள் தம் கணவர்களிடம் தெய்வத்தன்மை வாய்ந்த எம்மிலும் பார்க்க ஒரு மனிதக் பெண் எவ்வாறு பண்பிலும் பணிவிடையிலும் சிறந்து புகழ் பெற முடியும்? என்று வாதம் செய்தனர்.
படைப்பு என்பது பிரம்ம விருப்பம். அது செலுத்தும் வழி தான் யார் என்றாலும் செயல்பட முடியும் என்ற உண்மையை உய்த்து உணர்ந்த பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் தம் தேவியரிடம் அமைதியாக இருக்கும்படியும் தாங்கள் சென்று சோதிப்பதாகவும் கூறி, நாடகத்திற்கு தயாராகிப் பூலோகத்திற்கு வந்தார்கள்.
ஆசிரமத்தில் அநுசூயா மட்டும் இருந்தாள். அத்ரி முனிவர் வெளியில் சென்றிருந்தார். அந்த சமயத்தில் மூர்த்திகள் மூவரும் சந்நியாசிகளாக வேடம் தரித்து வீட்டிற்கு முன் வந்து உணவளிக்கும்படி குரல் கொடுத்தனர். அனுசூயை வந்த அதிதிகளை வரவேற்று உபசரித்து அமரச் செய்தாள்.
வந்தவர்கள், தாங்கள் மிகவும் பசியோடு இருப்பதாகவும், தாங்கள் விரும்பும் விதத்தில் உணவளிக்க வேண்டும் என்றும் கூறினர். வெளியில் சென்றிருக்கும் கணவர் வந்து விடட்டுமே என்று நினைத்திருந்த அநுசூயை அவர்கள் பசியுடன் இருப்பதாகக் கேட்டு உரிய ஏற்பாடுகளைச் செய்து உணவருந்த அழைத்தாள்;. அவர்கள் மீண்டும் தாங்கள் விரும்பும் வண்ணம் உணவளிக்க சித்தமா? என்று கேட்டனர்.
சித்தமாக இருக்கிறேன் என்று தெளிந்த உள்ளத்துடன் கூறினாள் அவள். சோதிக்க வந்த முனிவர்கள், ஆடைகளற்ற நிலையில் உணவளிக்குமாறு கோரிக்கை வைத்தனர்.
அநுசூயா திடுக்கிடவில்லை. அமைதியாக, திடமாக, வந்திருப்பவர்களை உற்று நோக்கினாள். தவத்தாலும், பெண்மையின் சிறப்பினாலும் பதிவிரதா தன்மையினாலும் உயர் உணர்வு நிலையின் உச்சத்தில் இருந்த அந்த மாதரசி, ‘இவர்கள் சாதாரண முனிவர்கள் அல்ல. என்னைச் சோதிக்க வந்த மகா புருஷர்களாக இருக்க வேண்டும். அதிதிகளின் ஆசையை நிராகரிக்கக்கூடாது.
என்னுடைய சித்தம் சுத்தமாக இருந்தால், எனது கணவரின் தவம் வலிமையாய் இருந்தால் யாரால் என்ன செய்து விட முடியும்?” என்று சிந்தித்துப் பார்த்து ஒரு முடிவிற்கு வந்தாள். ‘தங்களின் விருப்பப்படியே நான் உணவிடுகிறேன்!” என்று கூறி, சமையல் அறைக்குள் சென்றாள். அடுத்த கணம் கண்களை மூடித் தன்னுள் மூழ்கி, ஆத்ம ஆற்றலைப் பணிந்து வேண்டினாள். அவளது அகமுகப் பிரார்த்தனையின் வலிமையால் ஆசனத்தில் அமர்ந்திருந்த முனிவர் மூவரும் குழந்தைகளாக மாறிவிட்டனர்.
அநுசூயா ஒவ்வொரு குழந்தையைத் தூக்கி எடுத்து அவர்கள் விரும்பிய வண்ணம் உணவை ஊட்டினாள். அவற்றின் வயிறு நிரம்பியதை அறிந்து, வாய் துடைத்து, மரத்திலே தூளி கட்டி அதிலே குழந்தைகளை விட்டு, சப்தஸ்வரங்களுடன், உபநிஷதப் பொருள் பொதிந்த இனிய பாடல்களைத் தாலாட்டாகப் பாடித் துhங்க வைத்தாள்.
அத்திரி முனிவர் தன் ஆசிரமத்தை அடைந்ததும், தனது பத்தினி பாடுவதையும், தூளியில் மூன்று குழந்தைகள் கிடப்பதையும் பார்த்துவிட்டு நடந்ததைப் பற்றி வினவினார். அவரும் வியந்தார். உடனே அவர் தம் திவ்விய பார்வையால் வந்தவர்கள் மூவரும் மும்மூர்த்திகளே என்பதைப் புரிந்து கொண்டார். தம் மனைவியுடன் சேர்ந்து அவர்களை வணங்கினார். உடனே மூவரும் தமது சுய வடிவத்தை எடுத்து எதிரில் தோன்றி இருவரையும் ஆசீர்வதித்தனர்.
அத்திரி முனிவரின் மனைவி அநுசூயாதேவியின் பெருமையை வெளிப்படுத்தவே இவ்வாறு நிகழ்ந்தது என்று கூறி, வேண்டும் வரத்தை அளிப்பதாகக் கூறினர். மும்மூர்த்திகளும் ஒரே வடிவமாக மூன்று குழந்தைகளும் என் புத்திரர்களாக இருக்க வேண்டும் என்ற வரத்தை அநுசூயா பிரார்த்தித்தாள். அவர்களும் அந்த வரத்தை அளித்து விட்டு மறைந்தனர். அந்த மும்மூர்த்திகளின் அம்சமாக ஸ்ரீ தத்தாத்ரேயர் அத்திரி முனிவருக்கும் அனசூயா தேவிக்கும் புத்திரனாக அவதரித்தார். அவதுhத குரு பரம்பரையின் மூல புருஷராக அவர் விளங்கினார். இந்த வரலாற்றை சித்தர் சொல்ல, நாமதாரகன் மிகுந்த சிரத்தையுடன் கேட்டான்.
No comments:
Post a Comment