வேத காலத்தில் பாரதத் திருநாட்டில் தவ முனிவர்கள் ஆசிரமங்கள் அமைத்து இறையுணர்வில் தோய்ந்து உலக மக்களுக்கு வழிகாட்டிகளாய், தேவர்களின் உலகங்களுக்கும் பூமிக்கும் தொடர்பு கொண்ட நிலையில் உள்ளுணர்வால் உயர்வடைந்து வாழ்ந்த காலம் அது. அத்தகைய ஒரு கால கட்டத்தில்தான் தெய்வங்களின் ஒருமித்த அம்சமாக ஸ்ரீ தத்தாத்ரேயர் அவதரித்தார். அவதூத ஆசிரம முறையில் ஆரம்ப குருமகான் அவரே.
அவதாரங்கள் தொடர்ந்தன. மக்கள் பரிணாம வளர்ச்சியில் உயர வேண்டும் என்பதற்காக மகான்கள் தொடர்ந்து அவதரித்து, வாழும் முறையைத் தர்ம நெறி சார்ந்ததாக இருக்கும்படி நெறிப்படுத்திக்கொண்டே இருந்தனர். அவ்வகையில் சமுதாய நெறிமுறைகள் கட்டுக் குலைந்து கொண்டிருந்த ஒரு கால கட்டத்தில் , ஸ்ரீ தத்தாத்ரேயர், ஸ்ரீ பாத வல்லபர் என்ற மனிதராகப் பூமியில் மீண்டும் அவதரித்தார்.
மத்திய இந்தியாவின் கிழக்குப் பகுதியில் பீடாபூர் என்ற தேசத்தில் ஆபஸ்தம்ப சாகையில் பிறந்த ஆப்னராஜா என்ற பிராமணர் ஒருவர் இருந்தார். அவரது மனைவி சுமதா. அவள் இல்லறத்தை நல்லறமாய் நடத்திக்கொண்டு, பதி சேவை செய்து, வந்த விருந்தினரை ஆதரித்துகொண்டு வாழ்ந்து வந்தாள்.
ஓர் அமாவாசை தினத்தன்று அவர்கள் வீட்டில் சிரார்த்தம் (இறந்தவர்களுக்கு திதி கொடுப்பது) நடைபெற்றது. பிராமண முறைப்படி செய்ய வேண்டிய சடங்குகள் எல்லாம் வரிசையாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. திவசச் சமையல் தயாராக இருந்தது. பிராமணர்கள் உணவருந்த வேண்டியது தான் பாக்கி. அந்த சமயத்தில் ஒரு துறவி அவ்வீட்டு வாசலில் வந்து, பவதி பிட்சாந்தேஹி! என்று சொல்லிக்கொண்டு நின்றார்.
ஆசார முறைப்படி இறந்த முன்னோர்களுக்குத் திதி கொடுக்கும் நாளன்று வெளி ஆட்கள் யாருக்கும் உணவளிக்கக்கூடாது. பிட்சை அளிக்கக்கூடாது. மேலும் வந்திருக்கும் பிராமணர்கள் உணவருந்தி, காக்கைகளுக்கு அன்னமிட்ட பிறகு தான், வீட்டில் உள்ளவர்களே சாப்பிட முடியும். மிகுந்த சிரத்தையுடன், கூடுதல் கவனத்துடன் பிராமணர்கள் பொறுப்பாகச் செய்ய வேண்டிய சடங்கு இது.
இவ்வளவும் சுமதா நன்றாக அறிந்தவள் தான். என்றாலும் வாயிலில் நின்ற துறவிக்கு உணவளிக்காமல் அவரைப் பசியுடன் திருப்பியனுப்ப அவள் விரும்பவில்லை. எனவே, வகுக்கப்பட்ட நியமங்களை மீறி அவள் பிராமணர்கள் சாப்பிடும்;; முன் பிட்சுவாக வந்தவருக்கு அன்னமிட்டாள்.
கணவனுக்கு அடங்கிய நிலையில் குலதர்மத்தை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தும் துணிவுடன் பசியறிந்து உணவு அளித்த சுமதாவின் முன் பிச்சை பெறுபவராக, மும்மூர்த்திகளின் ஒருமித்த மகானாகிய ஸ்ரீ தத்தாத்ரேயர் நின்றார். அவளது தாய்மைப் பண்பைப் பாராட்டி. தாயே! உன் சேவையைக் கண்டு நான் மகிழ்ந்தேன். வேண்டும் வரத்தைக்கேள்! என்று கூறினார்.
அவள் அவரை வணங்கிப் பலவிதமாகத் துதித்தாள். பிறகு ஸ்வாமி! தாங்கள் என்னைத் தாயே! என்று அழைத்தீர்கள். அந்த வாக்கு பொய்க்கக்கூடாது. உம்மைப் போன்ற ஞானியை நான் மகனாகப் பெற வேண்டும். ஏனென்றால் எனக்குப் பிறக்கும் குழந்தைகள், பிறந்த சில காலத்திற்குள்ளாகவே இறந்து விடுகின்றன. பிழைத்து உயிர் வாழ்கின்ற குழந்தைகள் குருடாகவும், முடமாகவும் இருக்கின்றன! என்று கூறிக் கண்ணீர் விட்டாள்.
அவள் வேண்டுகோளை வந்திருந்த தத்தர் ஏற்பதாகக் கூறி அதில் ஒரு மாற்றத்தையும் கூறினார். அம்மா! உன் விருப்பப்படி எம்மைப் போன்ற ஒரு ஞானி மகனாகப் பிறப்பான். ஆனால் அவன் அநேக நாள் உன் வீட்டில் தங்க மாட்டான். பெரிய ஞானியாகி உன் துன்பங்களைப் போக்கி, உலகில் ஞான மார்க்கத்தைப் பரப்புவான்! என்று சொல்லி மறைந்தார்.
பக்தையான சுமதா நடந்தவற்றை அப்படியே தன் கணவரிடம் கூறினாள். இருவரும் மனம் மகிழ்ந்து, நெகிழ்ந்து இறைவனை வழிபட்டுப் போற்றித் துதித்தனர். பிறகு பக்தியுடன் ஸ்ரீ தத்தரின் அவதாரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
சுமதா தன்னுடைய கணவனின் அனுமதி இல்லாமல் சிரார்த்த (திதி) தினத்தில் பிட்சை அளித்துவிட்ட போதிலும், தோஷம் ஏதும் ஏற்படவில்லை. மாறாக எந்த சிரார்த்தம் செய்தாலும் முடிவில் ஏகோ விஷ்ணு! என்று சொல்லி அந்த விஷ்ணுவிற்கு அர்ப்பணம் செய்கின்றோமோ எந்த விஷ்ணுவிற்கே அவள் அன்னமிட்டதால், பித்ருக்கள் சுவர்க்கத்தை அடைந்து பிறவிப் பிணி தீர்த்தனர்.
எனவே, மதிய வேளையில் யார் பிச்சைக்கு வந்தாலும், ஒன்றும் இல்லை போ! என்று சொல்லாமல் நம் சக்திக்கு ஏற்றவாறு பிட்சை இட வேண்டும். அந்த நேரத்தில் வீட்டிற்கு யார் வந்தாலும் அவர்களுக்கு உணவிட்டு உபசரிக்க வேண்டும். தத்தர் எந்த ருபமாக வருவார் என்று சொல்ல முடியாது.
நாட்கள் மாதங்களாயின. இறைவன் அருளை வரமாய்ப் பெற்ற சுமதா ஒரு நல்ல நாளில் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றாள். தமது குறை தீர்க்க வந்த குலக்கொழுந்தை இருவரும் தெய்வம் தந்த பிரசாதம் என உறுதியாக எண்ணி, ஸ்ரீ பாதன் என்ற பெயரைச் சூட்டினர். குழந்தை வளர்ந்து ஏழு வருடங்களாயின. அவனுக்கு முறைப்படி உபநயனம் செய்து வைத்தனர். உபநயனம் என்பது சிறுவனை வேதம் கற்கத் தகுதியுடையவனாக, பிரம்மச்சாரியாக ஆக்குகின்ற ஒரு சடங்கு. ஸ்ரீ பாதனுக்கு உபநயனம் செய்து முடித்த உடனேயே நான்கு வேதங்களையும், சாஸ்திரங்கள், மீமாம்சம் முதலிவற்றையும் மிகத் தெளிவாகத் தானாகவே சொல்ல ஆரம்பித்தார். கூடியிருந்த பிராமணர்களும் மற்றவர்களும் அதிசயப்பட்டு, யாரோ சித்த புருஷர் ஏதோ காரணத்திற்காக இவர்களுக்குப் புதல்வனாகப் பி;றந்திருக்கின்றார்! என்று பேசிக்கொண்டனர்.
ஸ்ரீபாதனுக்குப் பதினாறு வயது வந்தது. தாய் தந்தையர் அவனுக்குக் கல்யாணம் செய்ய யோசித்தனர். இதை அறிந்த ஸ்ரீ பாதன் தான் பிரம்மச்சாரி என்றும், யோகி என்றும், மற்றப் பெண்களைத் தாயாகவே தான் பாவிப்பதாகவும், இது சத்தியம் என்று கூறி, என்னை ஸ்ரீ வல்லபர் (லட்சுமியின் கணவன்) என்று கருத வேண்டும் என்றான். இதற்குப் பிறகு அவரை ஸ்ரீபாத ஸ்ரீ வல்லபர் என்றே எல்லோரும் அழைத்தனர். அன்று வந்த துறவி சொன்னது உண்மையாயிற்றே! என்று தந்தை நினைத்தார். தாயோ புத்திர பாசத்தால் மிகவும் வருத்தமடைந்து, ‘உன்னைத் தவிர எங்களை யார் காப்பாற்றுவார்கள்? உன்னை நம்பியவர்களை இப்படிக் கை விடலாமா? காப்பாற்ற வேண்டாமா?” என்று சொல்லிக்கொண்டு மயக்கமடைந்து விட்டாள்.
ஸ்ரீபாதர் தாயைத் தேற்றினார். ‘பயப்பட வேண்டாம்! உங்களை நான் அப்படி நிர்க்கதியாய் விட்டுவிட மாட்டேன்” என்று சொல்லி அருகில் நின்றிருந்த தன் சகோதரர்களான குருடனையும், முடவனையும் தமது அமிர்தப் பார்வையால் பார்க்க, அடுத்த நொடி இருவருமே மிக அழகான உடலமைப்பு கொண்டவர்களாகவும், வேத சாஸ்திர பண்டிதர்களாகவும் ஆகிவிட்டனர். எல்லோரும் வியப்போடு பார்த்திருக்க சகோதரர் இருவரும் அவரை நமஸ்கரித்தனர்.
தங்களின் கருணையால் எங்கள் பாபங்கள் தெளிந்தன! என்றனர். ஸ்ரீபாதர் அவர்களை ஆசீர்வதித்து,’ இனி உங்களுக்கு ஒரு குறையுமில்லை. நல்ல விதமாகத் திருமணம் செய்துகொண்டு, சகல செல்வங்களையும் பெற்று நல்ல புத்திரர்களையும், பேரக் குழந்தைகளையும் அடைந்து சுகமாக வாழ்வீர்கள்! தாய் தந்தையருக்கு உரிய பணிவிடைகளை இறுதிவரை பொறுப்போடும் அன்போடும் செய்து வாருங்கள்!” என்றார்.
பிறகு ஸ்ரீபாத ஸ்ரீ வல்லபர் தம் பெற்றோருக்கு உரிய ஆறுதல் மொழிகள் கூறி ஊர் மக்கள் அனைவரிடமும் விடைபெற்று வடக்கு திசை நோக்கிப் புறப்பட்டு போனார். ஓர் உயர்ந்த ஸாதுக்கள் பரம்பரையை உருவாக்கவும், சாதுகளுக்கு தீட்சை கொடுக்கவும், அவர்களுக்கு அனுக்கிரகம் செய்யவும் அதிவேக யாத்திரை மேற்கொண்டார். காசி சேத்திரத்திற்குச் சென்றார். பிறகு பத்ரி நாராயணனைத் தரிசித்தார். பிறகு கோகர்ணம் என்னும் புண்ணியத் தலத்திற்கு வந்தார்.
இவ்வாறு கங்காதரரின் குமாரரான நாமதாரகனுக்கு ஸித்தர், ஸ்ரீபாத ஸ்ரீ வல்லபர் பிறந்த கதையைக் கூற, நாமதாரகன் பக்தியுடனும், பணிவுடனுடம் அவர் கூறியதைக் கேட்டான்.
No comments:
Post a Comment